என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்கள்"
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு- 4200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் நேற்று வழங்கினர்.
இந்திய அரசின் தேசிய கடல் வனத்துறை தொழில் நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினர்.
குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் வெங்கடேசன் தலைமையில், அருள் முத்தையா, வெங்கடேசன், திருமுருகன், சுந்தர வடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆலங்குடி, நெடுவாசல், சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4,200 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் ராமசாமி, நூலகர் வெங்கட் ரமணி, ஓய்வு ஆசிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். #tamilnews
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும்.
10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த 1,000 மாணவ- மாணவிகளை மருத்துவ மேல்படிப்புக்கு தேர்வாக வைப்பதே எங்களது இலக்கு.
அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பிப்ரவரியில் மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உலக அளவில் தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயர அன்றைய வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் செல்போன் மூலமாக ‘‘யூ டியூப்பில்’’ பார்க்கலாம். அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடங்களை படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நீடித்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. மத்திய அரசும் சத்துணவு திட்டத்துக்கு உதவி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வருகை குறைவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
1000 குழந்தைகள் வரை பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த மையங்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அருகில் உள்ள மையங்களுக்கு மாற்றப்படுகிறது. அந்த மையங்களில் இருந்து உணவு தயாரித்து மாணவர்கள் குறைவாக உள்ள மையங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் 10,000 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும்” என்றார்.
இதுபற்றி சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறுகையில், “சத்துணவு மையங்களில் பணியிடங்களை ஒரே சீராக்கும் வகையில் 1992-ம் ஆண்டே அரசு இந்த முடிவு எடுத்தது. அது தான் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. நேரடியாக சத்துணவு மையங்கள் மூடப்படவில்லை” என்றார். #TNGovt #NutritionCenters
தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்” என்று அறிவித்தது.
அதன்படி அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச லேப்- டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்கீழ் 2011-2012-ம் ஆண்டு 8.99 லட்சம் இலவச லேப்-டாப்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. 2012- 2013-ம் ஆண்டு 7.56 லட்சம் லேப்-டாப்கள், 2013-2014-ம் ஆண்டு 5.65 லட்சம் லேப்- டாப்கள், 2014-2015-ம் ஆண்டு 4.97 லட்சம் லேப்- டாப்கள், 2015-2016-ம் ஆண்டு 5.19 லேப்-டாப்கள் வழங்கப்பட்டன.
2016-2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 5.58 லட்சம் லேப்-டாப்களாக அதிகரித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு 2017-2018-ம் ஆண்டு 42 ஆயிரத்து 473 லேப்- டாப்கள்தான் வழங்கப்பட்டன. கடந்த 7 ஆண்டுகளில் 38 லட்சத்துக்கும் மேற்பட்ட லேப்-டாப்கள் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.
2017-2018-ம் ஆண்டு 4.73 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான லேப்-டாப்களும் வழங்கப்பட வேண்டியது உள்ளது. பல்வேறு காரணங்களால் இலவச லேப்-டாப்கள் வழங்குவது தாமதம் ஆனது.
தமிழக அரசு இந்த திட்டத்திற்காக சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.5 லட்சம் லேப்-டாப்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்குகிறது. தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் இதற்காக டெண்டர் விடப்பட்டு லேப்-டாப்கள் பெறப்படுகின்றன. எந்த நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு தயாரித்து தருவதாக சொல்கிறதோ அந்த நிறுவனத்திடம் லேப்- டாப்கள் பெறப்படுகின்றன.
கடந்த ஆண்டு 4.73 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்பட வேண்டியது நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான லேப்- டாப்களையும் மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டியது உள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிக அளவில் லேப்-டாப்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் எல்காட் நிறுவனம் டெண்டர் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதிலிருந்து லெனோவா நிறுவனம் லேப்-டாப்களை தயாரிப்பதற்கான டெண்டரை பெற்று உள்ளது.
இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த நிதி மூலம் 15 லட்சத்து 66 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்படும்.
ஒவ்வொரு லேப்-டாப்பும் ரூ.10 ஆயிரம் மதிப்பில் வழங்குவதற்கு லெனோவா நிறுவனம் ஒத்துக்கொண்டு இருப்பதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு லேப்-டாப்பும் சராசரியாக சில நூறு ரூபாய் குறைவாகவே வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலவச லேப்-டாப்க்கான விலை விவரங்கள் மற்றும் அவை மாணவர்களுக்கு விநியோக்கப்படும் விவரங்களை முதல்- அமைச்சர் வெளியிடுவார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் நடப்பு கல்வி ஆண்டில் உள்ள மாணவர்களும் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களும் இலவச லேப்-டாப்புகளை விரைவில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லெனோவா நிறுவனம் இலவச லேப்-டாப்களை விரைவில் சப்ளை செய்யும் என்று தெரிய வந்துள்ளது. எனவே வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பே இலவச லேப்-டாப்கள் மாணவ- மாணவிகளுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச லேப்-டாப் திட்டத்துக்காக தமிழக அரசு மிக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து அதிகபட்சமான லேப்- டாப்களை கொள்முதல் செய்வது இதுவே முதல் தடவையாகும். #FreeLaptops
ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாடங்களை பாதியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் கரிகுலம் என்று சொல்லப்படுகிற பாடங்களை உருவாக்குகின்றது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டு வருகிற புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. இனி கல்லூரிகளுக்கு சென்றால் கூட அவர்கள் பாட திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டிய அளவிற்கு உருவாகி உள்ளது.
வருகிற நிதி ஆண்டில் பாடங்களை குறைத்து தேர்வை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கூடுதல் சுமை உள்ளதாகவும் நாட்கள் போதவில்லை என்றும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மத்திய அரசின் மாணவர்கள் திறனாய்வு தகுதி தேர்வுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்களுக்கு நீச்சலை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும். கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 2001-02-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் பின்னர் 2005-06-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டிலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆயிரத்து 524 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் ஒருசில மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில் முன் பகுதியில் கூடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் வட்டவடிவில் கன்னட மொழியில் உள்ள முத்திரை காணப்பட்டது. மாணவி படிப்பது போன்ற படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழில் பொது கல்வித்துறை கர்நாடக அரசு என்று பொருளாகும்.
கர்நாடக முத்திரை இருப்பதை கண்டு மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை தற்போது தழுதாளி பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதையடுத்து சைக்கிள்களை மாணவர்கள் வாங்கிச்சென்றனர்.
இதுபற்றி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்ட போது, இந்த சைக்கிள் எவ்வாறு இங்கு வந்தது? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் இதுபோன்ற முத்திரையுடன் எத்தனை சைக்கிள்கள் வந்தள்ளது? என்கிற விவரங்களை சேகரித்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளோம். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அரசால் கொள்முதல் செய்து தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் அனைத்தையும் அரசு பரிசோதித்தது. இவை அனைத்தும் தரமானது என தெரிந்த பின்னர்தான் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சைக்கிள்கள் தரமற்றவை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. சைக்கிள்கள் கொள்முதல் செய்யும்போது அதில் அந்த ஸ்டிக்கர் மட்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அவை நீக்கப்படும்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
கர்நாடக முத்திரையிடப்பட்ட சைக்கிள் தமிழகத்துக்கு வந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சைக்கிள் வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட சைக்கிள்களில் கன்னட மொழி மற்றும் படம் உள்ள சைக்கிள்களை பிரித்தெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #FreeCycles
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஊராட்சி செம்மம் பாளையத்தில் உள்ள கால்நடை கிளை மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. கூடுதலாக ஒரு உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் திறப்பு விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மருத்துவ மனையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம், கோழி வளர்ச்சி திட்டம், கால்நடை பசுந்தீவன திட்டம், கால்நடை காப்பீடு திட்டம் விலையில்லா ஆடுகள் திட்டமும் செயல்படுத்தப்படும்.
பள்ளி கல்வி துறையில் மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 1-ந்தேதி முதல் அரசு பள்ளியில் பிரிகே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். அடுத்து வரும் கல்வி ஆண்டில் ஆரம்பம் முதலே இலவச சைக்கிள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு 11 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் ஒரு ரூபாய் கூட கல்விக்காக கொடுக்க வேண்டியது இல்லை. அனைத்தும் அரசே ஏற்கும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ministersengottaiyan #governmentschool #prekglkgukg
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார். #CVeshanmugam
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும், விஞ்ஞான் பிரசார் நிறுவனமும் இணைந்து தேசிய அளவிலான இணைய வழி திறனறிதல் தேர்வினை நடத்தியது.
இந்த தேர்வை, 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 33 பேர் ஸ்மார்ட் போன், மடிக்கணினியை ஆகியவற்றை பயன்படுத்தி எழுதினர். தேர்வினை பள்ளி தலைமை ஆசிரியை சகுந்தலா தொடங்கி வைத்தார். தேர்வு மைய கண்காணிப்பாளராக ஆசிரியர் ராமச்சந்திரன் செயல்பட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், பள்ளி ஒருங்கிணைப்பாளருமான குழந்தைவேல் செய்திருந்தார். பெரம்பலூர் மாவட்டத்திலே முதல் முறையாக அரசு பள்ளியில் இணைய வழி திறனறிதல் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை இருகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை தாண்டி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அங்கு சுரங்க நடைபாதை கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல மாதங்கள் ஆன பிறகும் அந்த சுரங்கப்பாதை இன்னும் திறக்கப்படவில்லை.
எனவே பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு வந்து சுரங்கப்பாதையை உடனே திறக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவ, மாணவிகள் கூறினர். #tamilnews
தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சீருடையில் மாற்றம் கொண்டு வந்தாலும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் ஷூ அணியாமல் செருப்புகள் அணிந்துதான் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர்.
இந்த குறையை நிவர்த்தி செய்ய அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விலையில்லா செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்தவாரம் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தெரிவித்திருந்தார்.
இதை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறை வேகமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2017-18-ம் ஆண்டில் 1 முதல் 10 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 லட்சம் விலையில்லா செருப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அதே அளவுக்கு அடுத்த ஆண்டு ‘ஷூ’ வழங்க அரசுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இதுபற்றி அரசு உயர் அதிகாரி கூறுகையில், மாணவ-மாணவிகளின் கால்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு அளவுகளில் ஷூ தயாரிக்க டெண்டரில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். #GovtSchools #Shoe #MinisterSengottaiyan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்